இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். சோயிப் மாலிக்கிற்கு 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து பெற்று சானியா மிர்சாவை 2வதாக திருமணம் செய்தார். சானியா மிர்சா – சோயிப் மாலிக் தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இதனிடையே, சானியா மிர்சாவுக்கும், சோயிப் மாலிக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் மனைவி சானியா மிர்சா தொடர்பான பதிவுகளை நீக்கினார். இதனால், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகின. அதேபோல், சானியா மிர்சா தனது மகனுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.
சானியா மிர்சா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து தொடர்பாக பதிவு சூசகமான ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பது கடினமானது. உடலை சரியாக வைத்திருப்பது கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்’ என தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு மூலம் சானியா மிர்சா தனது கணவன் சோயிப் மாலிக்கை விட்டு பிரிந்து விட்டாரோ? இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனரோ? என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிதை திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. சானியா மிர்சாதான் சோயிப் மாலிக்கிற்கு விவாகரத்து கொடுத்துள்ளார். கணவனை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக சானியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நடிகை சனா ஜாவித் பிறந்தநாளன்று சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், சனாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் சோயிப் மாலிக் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். அப்போதில் இருந்தே சானியா மிர்சாவை சோயிப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டு சனாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின.
தற்போது, அந்த தகவல்களை உண்மையாக்கும் வகையில் நடிகை சனா ஜாவிதை சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படத்தை சோயிப் மாலிக் தனது சமூகவலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, ஆயிஷா, சானியா மிர்சா ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சோயிப் மாலிக் தற்போது பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை 3வதாக திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.