இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் ரிங்கு சிங். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமான அயர்லாந்து தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான காலிறுதியில் சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவினார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரிலும் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியா தொடரை சமன் செய்ய உதவிய அவர் தற்போது முடிவடைந்த ஆப்கானிஸ்தான் தொடரிலும் ரசிகர்களின் பாராட்டை பெரும் அளவுக்கு அசத்தியுள்ளார். அவர், கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலுமே அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
அந்த வகையில் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் ரிங்கு சிங், இந்திய அணிக்கு புதிய மேட்ச் வின்னராக கிடைத்துள்ளதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியதாவது;- “ரிங்கு அற்புதமான பிளேயர். மேட்ச் வின்னர். அதை விட அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. எப்போதுமே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்கும் வீரர்கள்தான் உங்களுக்கு தேவை. அந்த வகையில் இந்திய அணிக்கு புதிய மேட்ச் வின்னராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார் ” இவ்வாறு அவர் பேசினார்.