ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அனிசிமோவாவை (அமெரிக்கா) வெளியேற்றி காலிறுதியை உறுதி செய்தார். சபலென்கா காலிறுதியில் செக் நாட்டை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். சபலென்கா ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக ருசித்த 11-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனை கோகோ காப் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் மாக்டலேனா ப்ரெச்சை (போலந்து) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஒன்றில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), அட்ரியன் மன்னரினோவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் மன்னரினோவை எளிதில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். ஜோகோவிச் காலிறுதியில் டெய்லர் பிரிட்சுடன் (அமெரிக்கா) மோதுகிறார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறி இருப்பது இது 58-வது முறையாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் அதிக முறை காலிறுதியை எட்டியவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை (58 முறை) சமன் செய்துள்ளார்.
இதில் நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் ஜானிக் சின்னர் (இத்தாலி) மற்றும் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.