இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில், வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரன்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து ‘பேஸ்பால்’ என்ற ஆக்ரோஷமான பாணியை கையில் எடுத்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து எதிரணியை திணறடித்து வருகின்றனர். சில சமயம் ஒரே நாளில் 450 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். ஆனால் அவர்களது இந்த யுக்தி இந்திய மண்ணில் எடுபடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கணித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘இந்திய சூழல் இங்கிலாந்துக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. ஆடுகளத்தில், ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே பந்து சுழன்று திரும்பும். சுழற்பந்து வீச்சாளர்கள் இரு முனையிலும் விக்கெட் வேட்டை நடத்துவார்கள். எனவே இங்கிலாந்தின் ‘பேஸ்பால்’ யுக்திக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு துளியும் ஒத்துழைக்காத பட்சத்தில் மட்டுமே இங்கிலாந்து அணியினரால் ஆதிக்கம் செலுத்த முடியும்’ என்றார்.