இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.
‘புளூ ஸ்டார்’ திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், “நான் ஒரு இடத்தில் இருந்தேன் அப்போது இயக்குனர் ஜெயக்குமார் எனக்கு கதை அனுப்பினார். அதை படித்துவிட்டு அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைத்து என் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரை பிக்-அப் செய்துவிட்டு ஒரு தேநீர் கடையில் இருந்து பேசினோம். அந்த முதல் சந்திப்பில் அவர் என்னிடம் உங்கள் கதாபாத்திரம் பிடித்திருந்ததா? என்று தான் கேட்டார். எனக்கு அந்த கதையை படித்ததும் அதில் இருந்த கதாபாத்திரங்கள் ரொம்ப தாக்கத்தை கொடுத்தது.
இந்த படத்தில் கிரிக்கெட் என்பது ஒரு முக்கியமான விஷயம். பா.இரஞ்சித் அண்ணனின் பெயர் வந்தாலே அரசியல் பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களா என்று தான் கேட்கிறார்கள். அரசியல் பேசுனா என்ன தப்பு. நாம் அன்றாட வாழ்வில் அரசியல் இருக்கிறது. அதை பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். பா.இரஞ்சித் தயாரிக்கும், இயக்கும் படங்களில் அவர் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவது பெருமையாக நினைக்கிறேன்” என்று பேசினார்.