89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதிவருகின்றன.
இந்த நிலையில் தும்பாவில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி, கேரளாவை எதிர்கொண்டது. முதல் இன்னிங்சில் மும்பை அணி 251 ரன்களும், கேரளா அணி 244 ரன்களும் எடுத்தன. பின்னர் மும்பை அணி 2-வது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் கேரள அணிக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய கேரள அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில் நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கேரள அணி 33 ஓவர்களில் 94 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரோஹன் குன்னம்மால் 26 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக 3-வது (ஹாட்ரிக்) வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் முதல் ஆட்டத்தில் பீகாரையும், அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவைவும் எளிதில் தோற்கடித்து இருந்தது.