காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, யாத்திரையின் ஒருபகுதியாக நேற்று அம்மாநிலத்தின் தலைநகர் கவுகாத்திக்குள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கவுகாத்தி நகருக்குள் செல்லாமல் நகரின் வெளிப்புறம் வழியாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், ராகுல்காந்தி தலைமையிலான யாத்திரை கவுகாத்தி நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நகருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, யாத்திரையில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, தொண்டர்களை சிங்கங்கள் என குறிப்பிட்டு தடுப்புகளை தகர்க்கும் வலிமை நம்மிடம் உள்ளது என்றார். மேலும், நாம் தடுப்புகளை தகர்த்துள்ளோம், ஆனால் சட்டத்தை தகர்க்கவில்லை என்றார்.
இதனை தொடர்ந்து கவுகாத்தி எல்லையில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி முன்னேறினர். இதனை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், கட்சி தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டுதல், பொதுச்சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.