உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்ட போரானது இன்றுடன் 700-வது நாளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கூறும்போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு பகுதியை இலக்காக கொண்டு ரஷியா, ஒரு பெரிய ராக்கெட் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில், மக்களில் 18 பேர் உயிரிழந்தனர். 130 பேர் காயமடைந்தனர் என கூறினார். இதேபோன்று நேற்று காலை கண்டம் விட்டு கண்டம் செல்ல கூடிய மற்றும் விமானங்களை அழிக்க கூடிய திறன் படைத்த ராக்கெட்டுகளை கொண்டு உக்ரைனில் உள்ள 3 நகரங்கள் மீது ரஷியா தாக்குதலை நடத்தியது.
இதில், 130 குடியிருப்பு கட்டிடங்கள் இலக்காகி இருந்தன என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷியாவின் எஸ்-300 ரக ராக்கெட்டுகள் நேற்று இரவில் வீசப்பட்டன. இதில், 9 பேர் காயமடைந்தனர். இதுதவிர, குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்தன என மண்டல கவர்னர் ஓலே சினிஹபோவ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் சிறை கைதிகளை ஏற்றி கொண்டு ரஷிய ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. 65 போர் கைதிகள், 6 விமான ஊழியர்கள் மற்றும் 3 பேரை சுமந்தபடி சென்ற அந்த விமானம் பெல்கரோடு பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது? என்பதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விமான விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு ராணுவ ஆணையமும் அந்த பகுதிக்கு சென்றுள்ளது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய 65 பேரும் பலியாகி உள்ளனர். இதனை ரஷியாவின் பெல்கரோடு பகுதி கவர்னர் கிளாட்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்ததில் இருந்து, உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரை, ரூ.54 ஆயிரத்து 199 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஜெர்மனி அனுப்பி உள்ளது.
இதேபோன்று, அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது. நிதி மற்றும் ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உக்ரைனின் கூட்டணி நாடுகள் உறுதி அளித்து உள்ளன. இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கும் கூடுதலாக முடிவுக்கு வராமல் போரானது நீடித்து வருகிறது.