இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா ஆகியோரின் அரைசதத்துடன் 436 ரன்கள் எடுத்தது.
190 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பது போல் இருப்பதாக அஸ்வின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் முதல் தர கிரிக்கெட்டிலும் அற்புதமான தொடக்கத்தை பெற்றுள்ளார். அவருடைய ஆட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். குறிப்பாக அதில் ரிஷப் பண்ட்டை நான் பார்க்கிறேன்.
பயமற்ற கிரிக்கெட் அவருக்கு சேவையாற்றுகிறது. ஜெய்ஸ்வால் தவறான காலை எடுத்து வைக்கவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தண்ணீருக்குள் நுழைந்த மீன் போல எடுத்து விளையாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.