“பெருந்தலைவர் காமராஜரை பின்பற்றி கல்வி சேவையில் நாடார் சமுதாயம் பெரும் பங்காற்றி வருகிறது” என நாடார் மகாஜன சங்க மாநாட்டில் தலைவர்கள் பேசினர்.
நாடார் மகாஜன சங்கத்தின் 2 நாள் மாநாடு, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் பேசினர். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பதை சமூக, பொருளாதார ரீதியாக எப்படி உயர்ந்து உள்ளார்கள்? என்பதை வைத்துதான் அறியமுடியும். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தவர்கள், படிப்படியாக உயர்ந்து சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு உயர்ந்து உள்ளனர்.
ஒருவருக்கு கல்வி அளிப்பதுதான் மிகப்பெரிய பணியாக இருக்கும் என்று சொன்னவர் காமராஜர். அவரது வழியை நாடார் சமுதாயம் பின்பற்றி கல்விச்சேவையில் பெரும் பங்காற்றி வருகிறது. பெண்கள் கல்வி கற்கக்கூடாது, மறுமணம் செய்யக்கூடாது என்று சொன்ன நிலை இன்று மாறி உள்ளது. கல்விக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். எந்த தொழிலை செய்தாலும், அவர்கள் படித்துவிட்டு செய்யட்டும். விவசாயம், வியாபாரம், தொழில் என எதை செய்தாலும் படித்துவிட்டு செல்லட்டும். சமூக வளர்ச்சியில், அரசியலும் ஒரு அங்கம். அரசியலிலும் முன்னுக்கு வரவேண்டும்.
நான் எம்.எல்.ஏ., அமைச்சராக வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது காமராஜரின் தொண்டன். அவரின் தொண்டர்கள் கடமை தவறமாட்டார்கள். சாதிவாரி கணக்கெடுத்தால்தான் அதற்கேற்றால் போல் அரசு வேலை, இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை பெற முடியும். அரசியல் அதிகாரம் என்பது மிக முக்கியம். அப்போது தான் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். நம்முடைய அடையாளங்கள் நம்பிக்கைகள், வழிபாடு, கலாசாரம், தொழில் ஆகிய ஒவ்வொன்றையும் பாதுகாக்க வேண்டி உள்ளது. எனவே அதை நோக்கி பயணிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 2 தலைவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒருவர் தந்தை பெரியார். மற்றொருவர் பெருந்தலைவர் காமராஜர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான காரணம் ஓட்டுக்காகவோ, அரசியல் காரணத்தினாலோ அல்ல. சமுதாயம் முன்னேற வேண்டும், தமிழ்நாடு முன்னேற வேண்டும், சமூக நீதி என்ற அடிப்படையில் நான் இங்கு வந்திருக்கிறேன்.
காமராஜரை நாம் ஒரு சமுதாயத்தின் தலைவராக மட்டும் பார்க்கக்கூடாது. அவர் ஒரு தேசிய தலைவர். காமராஜர் முதல்-அமைச்சராக வந்தவுடன் 28 ஆயிரம் பள்ளிகளை தொடங்கினார். காமராஜர் இல்லை என்றால் தமிழ்நாடு பின்னோக்கி சென்றிருக்கும். உலகத்தில் யாரும் சிந்திக்காத திட்டமாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். உழைப்பால் உயர்ந்தவர்கள் நாடார்கள். சவுந்திரபாண்டிய நாடார், சி.பா.ஆதித்தனார், ராமச்சந்திர ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார், மா.பொ.சி. உள்பட பலரின் கனவு என்பது, நாடார் சமுதாயம் மட்டும் முன்னேற வேண்டும் என்பதல்ல. தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பதாகும்.
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நமக்கு வரும். நாம் அதை உருவாக்க வேண்டும். யாரிடமும் கேட்க வேண்டாம், நாம் ஆளுவோம். நாம் ஆளுகிற காலம் வந்து விட்டது. அவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை. நமக்கு தேவை எம்.எல்.ஏ., எம்.பி. பதவி அல்ல. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகிய ஆட்சி அதிகாரம் வேண்டும். தென்மாவட்டங்களில் எந்த வளர்ச்சி திட்டமும் வரவில்லை. நாங்கள் அதற்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். தென்மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதில் தூத்துக்குடி மிகவும் பாதிக்கப்பட்டது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பலர் உதவினர். ஆனால் தூத்துக்குடிக்கு உதவவில்லை. நாம் ஆள வேண்டிய நேரம் வந்து விட்டது. மற்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. நாமும் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்வோம். தமிழ்நாட்டில் பா.ம.க. தவிர வேறு எந்த கட்சியும் காமராஜர் ஆட்சியை தருவதாக சொல்லவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் சரத்குமார் பேசியதாவது:-
நான் இந்த மாநாட்டுக்கு வந்ததற்கு ஒற்றை காரணம், இந்த சமுதாயம் தான். 100 ஆண்டுகளை கடந்து ஒரு சங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. அது எந்த சங்கமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் நாடார் மகாஜன சங்கம் 113 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சங்கம் நாடார் சமுதாயத்தை ஒருங்கிணைத்து, ஒற்றுமைப்படுத்தி, பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய உதவி வருகிறது. இதற்காக இவர்கள் எடுத்துக்கொண்ட கருவி கல்வி.
பல உறவின் முறைகளை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது நாடார் சமுதாயம் தான். இந்த சமுதாயத்தில் சமத்துவம் இணைந்துள்ளது. கல்வி அனைவருக்கும் அடிப்படை தேவை. பள்ளியாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, அவை சமத்துவத்தின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றன. கல்வியை மக்களிடம் கொண்டு சென்றவர் காமராஜர். அவரை சாதி என்ற கூட்டுக்குள் அடைக்காமல் இருந்ததுதான் நமது பெருமை. அவர் 2 பிரதமர்களை சுட்டிக்காட்டியவர். பெருந்தலைவர் காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தன. அந்த பொற்கால ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றால் அரசியல் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும்.
அரசியல் அதிகாரம் என்றால் மற்றவர்களிடம் சீட் கேட்பதில்லை. முதல்-அமைச்சர் ஆகின்ற தகுதி இருக்கின்றபோது எதற்காக வேறு ஒருவரிடம் கேட்க வேண்டும். உடனே சரத்குமாருக்கு முதல்-அமைச்சராக ஆசை வந்து விட்டது என்பார்கள். ஆம் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆசை இருந்தால் தான் வெற்றி பெற முடியும். பேராசை பெருநஷ்டம் என்பார்கள். ஆனால் பேராசை தான் உங்கள் உழைப்பை அதிகரிக்கும். இந்த சமுதாயம் அறிவை வளர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. தமிழகத்தில் 80.3 சதவீதம் கல்வி அறிவு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த சமுதாயம் ஏற்படுத்திய கல்வி புரட்சி. இந்த சங்கத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகள் தொடங்க வேண்டும். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியல் சாக்கடை என்றால் அதை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
கல்வி கற்றவர்கள் தேர்தலை புறக்கணிக்கும் போது, கல்வி கற்காதவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்துவிடுகிறார்கள். 2026-ஐ சிந்தித்து பார்த்து ஒரு முடிவு எடுங்கள். ஒன்றுபட்டு செயல்பட்டால் அரசியலிலும் நாம் பெரியவர்கள் ஆகிவிடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.