Tuesday, December 24, 2024
Google search engine
Homeஇந்தியாவருகிற 30-ம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வருகிற 30-ம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.

ஒற்றை மதவாத தேசியவாதத்தை காந்தி ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு காந்தி பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை! ‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.

தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட வருகிற 30-ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, வருகிற 30-ம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை.எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் அண்ணல் காந்தி.

நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments