Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாராஜஸ்தானில் 74 சதவீதம் வாக்குப்பதிவு: டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

ராஜஸ்தானில் 74 சதவீதம் வாக்குப்பதிவு: டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4-வது மாநிலமாக ராஜஸ்தானுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவுக்கு வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைதியான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் களத்தில் இவர்களது வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் 5.25 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இவர்கள் வாக்களிப்பதற்காக 199 தொகுதிகளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டு இருந்தன. அங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததையும் காண முடிந்தது.

பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் பல இடங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஆனால் பல வாக்குச்சாவடிகளில் அப்போது அதிகமான கூட்டம் காணப்பட்டது.

எனவே 6 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு பின்னரும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், இறுதி வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் தொகுக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்த 5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

மாநிலத்தில் நேர்மையான மற்றும் அமைதியான தேர்தலை உறுதிசெய்வதற்காக 1.70 லட்சத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments