டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய ஆட்சியாளர்கள், தற்போது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூட தயாராக இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் ஜி.கே.மூப்பனார் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நெல்லை வழியாக சென்ற த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், வண்ணார்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. டாஸ்மாக் கடைகள் மற்றும் போதைப்பொருட்களே இதற்கு அடிப்படை காரணம் ஆகும். போதைப்பொருட்கள் விற்பனைக்கு 100 சதவீதம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய ஆட்சியாளர்கள், தற்போது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூட தயாராக இல்லை.
மாறாக டாஸ்மாக் மது விற்பனையில் புதிய மாடல்களை புகுத்துகிறார்கள். பாட்டில்களுக்கு பதிலாக ‘டெட்ரா பேக்’ முறையில் மது விற்பனை செய்ய உள்ளார்கள். குடிப்பழக்கத்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். தற்போது ‘டெட்ரா பேக்’ மது விற்பனை செய்வது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதுபோன்ற தவறான செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.