ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர்.
மேலும் கடந்த 16-ந் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் உள்ள நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டிற்கு சொந்தமான விமானம், கேத்தே பசிபிக் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துடன் மோதியது.
இந்தநிலையில் ஜப்பானில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹோன்சு தீவின் கன்சாய் பிராந்தியத்தின் முக்கிய நகரமாக ஒசாகா விளங்குகிறது. வடக்கு ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இடாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு முனையத்தில் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ஏ.என்.ஏ)நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு இடாமியில் இருந்து மட்சுயமா நகருக்கு செல்வதற்கான அந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பாடுக்கு தயாராகி கொண்டிருந்தது.
அப்போது புகுவோகாவில் இருந்து புறப்பட்டு வந்த மற்றொரு ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இடாமி விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்தநிலையில் ஓடுபாதையில் புறப்பாடுக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சமிக்ஞைகளால் நடந்த இந்த விபத்தில் இரு விமானங்களில் முன்பக்க இறக்கைகள் சேதம் அடைந்தன. விபத்துக்குள்ளான விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் இடாமி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் விமான சேவை தடைப்பட்டது.