தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த ‘சலார்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது. ‘ஆதிபுருஷ்’ போன்று ‘சலார்’ திரைப்படமும் சர்ச்சையை கிளப்பிவிடுமோ என்ற ரசிகர்களின் அச்சத்தை ‘சலார்’ தூக்கி எறிந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898- ஏடி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் மாருதி இயக்கத்தில் ‘தி ராஜா சாப்’எனும் படத்திலும் நடிக்கிறார். இப்படி பல படங்களில் மும்மரமாக நடித்து வரும் பிரபாஸ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். அதாவது, சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வலி சரியாகாததால் ஒரு மாதம் நடிப்பிற்கு இவர் பிரேக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பிரபாஸ் இதுகுறித்து உறுதிப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.