பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (வயது 33). டாக்டரான இவர் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஜிம்மில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் பற்றிய புகைப்படங்கள், வருங்கால மனைவியுடன் செலவிட்ட நேரம் உள்ளிட்ட அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்திருக்கிறார்.
அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், தடகள வீரர்கள் மற்றும் அவர் வழிகாட்டிய பிற உடற்பயிற்சியாளர்களுக்கு கிடைத்த ஆச்சரியம் தரும் முடிவுகளையும் அவர் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் திடீரென காலமானார்.
அவர் ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டார் என்றும் அதனால் மரணம் அடைந்து விட்டார் என்றும் முதலில் தகவல் வெளியானது. எனினும், இந்த செய்தியை அவர் வேலை செய்து வந்த மருத்துவமனை மறுத்துள்ளது.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழந்து உள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், கரோலின் சாஞ்செஸ் என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
டாக்டர் சான்டோஸ் வேலை செய்த மருத்துவமனையிலேயே, ஊட்டச்சத்து நிபுணராக சாஞ்செஸ் பணியாற்றி வந்துள்ளார். வருங்கால கணவரின் மறைவை தொடர்ந்து, அவர் கிடார் வாசித்து, பாடல் பாடும் வீடியோ ஒன்றை சாஞ்செஸ் உருக்கத்துடன் பகிர்ந்து உள்ளார்.
எங்களுடைய நெருக்கத்தின் ஒரு சிறிய துளி. என்னுடைய அன்புக்குரியவர் நாங்கள் விரும்ப கூடிய பாடலை பாடுகிறார் என தெரிவித்து உள்ளார். சான்டோஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு, அதில் பலரும் இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.