பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு, மீட்புக்குழுவினர் வணிக வளாகத்தில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், வணிக வளாகத்திற்குள் சிக்கிய 50 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வணிக வளாகத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ தொடர்ந்து வணிக வளாகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் அதை கட்டுப்படுத்த கூடுதலாக தீயணைப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.