தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடித்த 25-வது படம் வெளியானது. இந்த படம் தொடர்பான விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, 25-வது பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் ரூ. 1 கோடி வரை உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து இருந்தார்.
நடிகர் கார்த்தியின் 25-வது பட வெளியீட்டை ஒட்டி, அவரது ரசிகர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தி, தலா 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் தொகையை நடிகர் கார்த்தி வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அவர், “உதவி பண்ண வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள். ஆனால் யார் மூலமாக உதவி செய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. பலரிடம் பணம் இருக்கிறது நேரம் இல்லை.”
“அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று சொல்லலாம். இதன் மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிய வரும். இந்த பணி இன்னும் தொடரும்,” என்று தெரிவித்தார்.