திருத்தணி பைபாஸ் சாலை காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர் பிரதீஷ் (வயது 37). இவர் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜாவிடம் உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2-ந் தேதி காலை வழக்கம் போல் பிரதீஷ் அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது முகமூடி அணிந்து வந்த 3 வாலிபர்கள் இரும்பு கம்பியால் அவரது கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த பிரதீஷ் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு செய்த பின்னர், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று பிரதீஷ் தாக்கப்பட்ட வழக்கில் ஆந்திர மாநிலம் நகரி மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த நவீன் (வயது 31), கீளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி (24), ஒய்.என். கண்டிகையைச் சேர்ந்த பரசுராம் (39) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:-
கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள். இவர்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மந்திரி ரோஜாவின் வலதுகரமாக செயல்படும் பிரதீஷுக்கும், தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் பிரதீஷ் ரோஜாவின் வெற்றிக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிட்டிபாபு என்பவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.