நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம்
கடந்த மாதம் 26-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, தரவுகளை சேகரித்து மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளனர்.
இதையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் 2-ம் கட்ட கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சுற்றுப்பயணம் விவரம், பொதுமக்களுடனான சந்திப்பு, என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு, நாளை (இன்று) முதல் 10-ந் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மண்டல வாரியாக சுற்றுப்பயணம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5-ந் தேதி இன்று காலை சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டலத்துக்கு குழுவினர் செல்கிறார்கள். மாலை வேலூர் மண்டலத்துக்கு செல்கிறார்கள். 6-ந் தேதி விழுப்புரம், சேலம் மண்டலங்கள், 7-ந் தேதி தஞ்சை, திருச்சி மண்டலங்கள், 8-ந் தேதி கோவை மண்டலம், 9-ந் தேதி மதுரை மண்டலம், 10-ந் தேதி நெல்லை மண்டலம் என இக்குழுவினர் மக்களை சந்திக்க செல்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய இருக்கிறோம். எந்த கட்சியும் தயாரிக்காத வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம். விவசாயிகள் முதல் வெளிநாடு வாழ் தமிழர்கள் வரை தங்கள் கருத்துகளை ஆன்-லைன் வழியாகவும், கூரியர் மூலமாகவும் அ.தி.மு.க.வுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.