காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உரித்து திட்டத்தின் முதற்கட்டமாக 10 ஆயிரம் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில். “இது எனது நாடு, நான் பிறந்த நாடு, எனது பாரம்பரியத்தை உறுதிப்படுத்திய நாடு. இந்நாட்டு மக்கள் தமது காணி உரிமையைப் பெறுவதற்காக நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். இன்று நாம் ஒரு புரட்சிகர சந்தர்ப்பத்தில் பங்கேற்கிறோம். 20 லட்சம் காணி உரிமைகள் இன்று வழங்கப்படுகின்றன. இந்த புரட்சியை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலம் உரிமை பெறும்போது, யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. எம்.பி , அதிகாரிகள் பின்னால் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தை விரும்பியபடி அபிவிருத்தி செய்யலாம், அதில் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது” என்றார்.