இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் சாந்தன் இலங்கைக்கு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பட்டியலில் அவரது பெயர் உள்ளிட்ட விபரங்கள் பரிசீலிக்கப்பட்டதையடுத்து அவர் இலங்கைக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதால் அவர் தனது கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருவதில் எந்தத் இடையூறுகளும் இல்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.