காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறை மக்களுக்கும் அது வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதியின் மலையக பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்- நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் காணியமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுடனும் தாம் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் தமக்கு உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களின் காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது காலம் காலமாக மலையகத்தில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணிகளை அவர்களுக்கு வழங்கிவிட்டு அதன் பின்னர் ஏனைய பகிர்ந்தளிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.