தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் டர்பன் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த டர்பன் அணி 2வது குவாலிபையர் ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 2வது குவாலிபையருக்கு முன்னேறியது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது குவாலிபையர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் குவாலிபையரில் தோல்வி அடைந்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 10ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொள்ளும்.