பாகிஸ்தானில் கடந்த 8-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியபோதும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும், போராட்டத்துக்கும் வழிவகுத்தது.
அதன் எதிரெலியாக தேர்தல் ஆணையம் முடிவுகளை வேகமாக அறிவிக்க தொடங்கியது. இருந்தபோதிலும் வாக்கு எண்ணிக்கை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
அதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 27 இடங்களில் பிற சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.
ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் தற்போதைய சூழலில் எந்த கட்சியும் அதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூட்டணி அரசை அமைப்பதற்கான ஆலேசானைகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி கூட்டணி தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற 3 சுயேட்சை வேட்பாளர்கள் நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய சட்டமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சுயேச்சைகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸில் (பி.எம்.எல்.) சேருவதற்கான முடிவை நேற்று அறிவித்தனர்.