இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசும் அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், பகலில் நிருபராகவும், இரவில் பயங்கரவாதியாகவும் செயல்பட்ட முகமது வஷா என்ற நபரை இஸ்ரேல் பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு காசா முனையின் மத்திய பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையில், அவருடைய மடிக்கணினி ஒன்றை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதனை ஆய்வு செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதில், காணப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து அவர், அல்-ஜசீரா பத்திரிகையின் நிருபராகவும், ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியாகவும் செயல்பட்டு வருகிறார் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் லெப்டினென்ட் கர்னல் மற்றும் அரபிக்கான செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறும்போது, சமீப மாதங்களாக அவர் பத்திரிகையாளராக செயல்பட்டார். ஆனால், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹமாஸ் அமைப்பின் பீரங்கி அழிப்பு படை பிரிவின் முக்கிய தளபதியாக இருந்திருக்கிறார். அந்த பயங்கரவாத அமைப்பிற்கான விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022-ம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதனால், பத்திரிகையாளர் உடையணிந்து பின்னர் பயங்கரவாதிகளாக செயல்படும் மற்ற நபர்களை பற்றிய விவரங்களையும் நாங்கள் வருங்காலத்தில் வெளியிடுவோமா? என்பது பற்றி எங்களுக்கே தெரியவில்லை என அத்ரே தெரிவித்து உள்ளார்.
இதற்காக அல்-ஜசீரா தொலைக்காட்சி செய்தி சேனலையும், இஸ்ரேல் படை கடுமையாக சாடியுள்ளது. பாரபட்சமற்ற செய்திகளை உங்களுடைய நிருபர்கள் வழங்கி வருகிறார்கள் என இதுவரை நாங்கள் நினைத்து வந்தோம். அவர்களை ஹமாஸ் பயங்கரவாதிகளாக முன்னிலைப்படுத்தும் வகையில், நீங்கள் அவர்களை உருவாக்கும் பணியில் பங்காற்றுவீர்கள் என நினைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம், காசாவின் ரபா நகரில் நடந்த வான்வழி தாக்குதலில், அல்-ஜசீரா பத்திரிகையாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேல் ராணுவம் குற்றச்சாட்டாக தெரிவித்து இருந்தது.