சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து உள்ளது. இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக சென்று வருபவர்கள் என்பதால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிக்குவதில்லை.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த சிலரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள், குருவியாக செயல்பட்டு தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
1½ கிலோ தங்கம்
அதன்படி சென்னை மண்ணடியில் குருவியாக செயல்பட்ட 27 வயது வாலிபர் ஒருவரது வீட்டிலும் நேற்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் கவுரிசங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தியது. இதையொட்டி அங்கு வடக்கு கடற்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அந்த வாலிபர் வீட்டில் இருந்து சுமார் ரூ.90 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.30 லட்சம் ஆகியவற்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.