கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்ட நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த சனிக்கிழமை மாலை 7.40 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
அந்த வீட்டுக்குள் குல்தீப் சிங் (56) என்னும் நபர் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட பொலிசார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிங் உயிரிழந்துவிட்டார்.
தந்தையுடன் ஏற்பட்ட தகராறின் போது சிங்குடைய மகனான சுகஜ் சிங் சீமா (வயது 22) என்னும் இளைஞர் அவரை கடுமையாக தாக்கியதாக கருதப்படுகிறது. தந்தையைத் தாக்கிவிட்டு சீமா வாகனம் ஒன்றில் தப்பியோடிவிட்டார்.
பொலிசார் கொலை வழக்குப் பதிவு செய்து சீமாவை தீவிரமாகத் தேடி வரும் நிலையில், அவர் ஆபத்தானவர் என்றும், அவர் ஆயுதம் வைத்திருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மக்களை எச்சரித்துள்ளனர்.
அத்துடன், அவரைக் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.