பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன் முடிவில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
இந்த சூழலில், ஒரு வாரகாலம் ஆகியும், அந்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சியமைக்காத நிலை காணப்படுகிறது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றபோதிலும், அவர்கள் ஆட்சியமைக்க முடியாத சூழலே உள்ளது.
இந்த நிலையில், பிற கட்சிகள் கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ள, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவரான ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால், அவர் பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலில், ஒரு வலிமையான அரசை அமைப்பதற்கான முயற்சியில் அக்கட்சிகள் இறங்கியுள்ளன. இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த நிலைமை மாற்றமின்றி நீடிக்குமென்றால், நாடு, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் பிரதமரையும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அதிபரையும் பார்க்க கூடும் என்று தெரிவித்து உள்ளது.
68 வயது ஆகும் சர்தாரி, 2008 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை (வயது 72), பிரதமர் வேட்பாளர் என நேற்று முன்தினம் இரவில் அக்கட்சி அறிவித்தது. 3 முறை பிரதமராக இருந்த 74 வயதுடைய நவாஸ் ஷெரீப் 4-வது முறையாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது.
இதனால், இரு கட்சிகளும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவையும் பெற்று, கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில், ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், சர்தாரி அடுத்த அதிபராகவும் வரக்கூடிய வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.