அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.
மாளிகைக்காடு – சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 – 15 வயதிற்குட்பட்ட 8 மாணவர்கள் நேற்று (16) ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்று படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திரப் படகுகளைக் கொண்டு தேடியும் இரவு 9 மணி வரை அந்த மாணவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
இதே வேளை, காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று (17) காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.