டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் (893 புள்ளி) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (818) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் வில்லியம்சன் 29 புள்ளிகளை ஈட்டி தனது முதலிடத்தை வலுப்படுத்தி இருக்கிறார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் (780), பாகிஸ்தானின் பாபர் அசாம் (768) ஒரு இடம் முன்னேறி முறையே 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (766) இரு இடம் சறுக்கி 5-வது இடம் வகிக்கிறார்.
இங்கிலாந்து தொடரில் ஒதுங்கிய இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலி (752) 7-வது இடத்தில் தொடருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் (131 ரன்) விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (731) ஒரு இடம் அதிகரித்து 12-வது இடத்தை பெற்றுள்ளார்.
இதே டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்கள் நொறுக்கிய இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் எகிறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். இது ஜெய்ஸ்வாலின் (699) சிறந்த தரநிலையாகும். ராஜ்கோட் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததால் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 41-வது இடத்தில் இருந்து 34-வது இடத்தை எட்டியுள்ளார்.
3-வது டெஸ்டில் அறிமுக வீரராக களம் கண்டு இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் 75-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 100-வது இடத்திலும் நுழைந்துள்ளனர். இந்த போட்டியில் 153 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 12 இடம் உயர்ந்து 13-வது இடத்தை தனதாக்கினார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 876 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (839 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதனால் 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (834) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய பவுலர்கள் கம்மின்ஸ் (828), ஹேசில்வுட் (818) ஆகியோர் முறையே 4-வது, 5-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். 3-வது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா (789) 3 இடம் அதிகரித்து 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (469) முதலிடத்திலும், ஆர்.அஸ்வின் (330) 2-வது இடத்திலும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (320) 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் அக்ஷர் பட்டேல் (281) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடமும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (280) ஒரு இடம் சரிந்து 5-வது இடமும் வகிக்கின்றனர்.