உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை நிறுத்தப்போவதாகவும், இது தொடர்பாக பயனர்களுக்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும், எக்ஸ் வலைதளத்தில் கடந்த இரு தினங்களாக தகவல் பரவுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “அன்புள்ள ஜிமெயில் பயனரே, ஜிமெயில் குறித்த ஒரு முக்கியமான அப்டேட்டை தெரிவிக்கிறோம். ஆகஸ்ட் 1, 2024 முதல், ஜிமெயில் அதிகாரபூர்வமாக சேவையை நிறுத்தி அஸ்தமனமாகும். அதன்பிறகு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பவோ, பெறவோ, சேமிக்கவோ முடியாது” என கூறப்பட்டிருந்தது.
இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பார்த்த ஜிமெயில் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் கணக்கில் வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடுமோ? என்று பயந்தனர்.
இது கூகுள் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிமெயிலின் அஸ்தமனம் பற்றிய தகவல் தவறானது என்று கூகுள் கூறியுள்ளது. எனவே, கூகுள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை நிறுத்தாது என்பது உறுதியாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்த பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஜிமெயிலில் புகுத்துவதில் மும்முரமாக உள்ளது. மின்னஞ்சல்களை எழுத பயனர்களுக்கு உதவும் வகையில் டூயட் ஏஐ என்ற அம்சத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம், ஜெமினி தொழில்நுட்பத்தை கூகுள் கணக்குகளுடன் ஒருங்கிணைக்க அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், ஜிமெயிலின் ஒரு அம்சம் இந்த ஆண்டு நிறுத்தப்படுகிறது. அதாவது, ஜிமெயிலின் அடிப்படை எச்.டி.எம்.எல். வியூ, ஜனவரி 2024 முதல் கிடைக்காது என்று கூகுள் கடந்த ஆண்டே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.