இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 24-ந்தேதி காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் வசம் உள்ள 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும் இருதரப்பும் உறுதியளித்தன.
அதன்படி போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் ஒவ்வொரு குழுவாக பணய கைதிகளை விடுவித்தது. அதே போல் ஒரு பணய கைதிக்கு 3 சிறை கைதிகள் என்ற வகையில் பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. அந்த வகையில் போர் நிறுத்தம் நடந்த 4 நாட்களில் ஹமாஸ் 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்திருந்தது.
இந்த சூழலில் காசா மக்களுக்கு பெரும் நிம்மதி அளித்த 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 27-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதே சமயம் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பலனாக போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
அதன்படி நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அமலுக்கு வந்தது. 5-வது நாள் போர் நிறுத்தமும் எந்த வித விதிமீறிலும் இன்றி கடைபிடிக்கப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்க நேற்று முன்தினம் 9 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 10 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இது தவிர மற்றொரு உடன்படிக்கையின்படி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேரும் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பணய கைதிகள் அனைவரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினருடன் இணைந்தனர். இதனிடையே 10 பணய கைதிகளுக்கு ஈடாக 30 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. அதன்படி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறிக்கொண்டன. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. எனினும் போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 நாட்களுக்கு போரை நிறுத்தி வைக்க இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இருப்பினும் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் அமலுக்கு வரும் என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்படும் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹமாஸ் சிறையிலிருந்து 10 இஸ்ரேலியர்கள் மற்றும் நான்கு தாய்லாந்து நாட்டவர்கள் உட்பட 14 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவித்ததை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் இந்த 14 பணயக்கைதிகளை விடுவித்தது, அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தால் காசா பகுதியில் இருந்து எகிப்துக்கு ரபா கிராசிங் வழியாக அழைத்துவரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.