இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. எனினும் போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 நாட்களுக்கு போரை நிறுத்தி வைக்க இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இருப்பினும் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் அமலுக்கு வரும் என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்படும் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த 2 நாள் தவிர்த்து இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேல் தரப்பு விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் காசா பகுதியில் ஹமாசால் விடுவிக்கப்பட்ட ரஷிய குடியுரிமையுடன் இரண்டு பணயக்கைதிகள் ரபா கிராசிங் வழியாக எகிப்தை வந்தடைந்ததாக அந்நாட்டுஅரசு தொலைக்காட்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்ட 50 வயதான யெலினா ட்ருபனோவ் மற்றும் 73 வயதான இரேனா டாட்டி ஆகிய இரு பெண்களும் ரஷிய முயற்சியின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாசால் ஒப்படைக்கப்பட்டதாக பாலஸ்தீன இஸ்லாமியக் குழு தெரிவித்துள்ளது.