ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா குற்றம் சாட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அதிகாரிகள் நவால்னி உடலை ஆர்க்டிக் சிறையிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும்படி அவரது தாயை அச்சுறுத்துகின்றனர். உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
என் கணவரின் உடலை எங்களிடம் கொடுங்கள். நீங்கள் அவர் உயிருடன் இருந்தபோது அவரை சித்ரவதை செய்தீர்கள். இப்போது அவர் இறந்த பிறகும் தொடர்ந்து சித்ரவதை செய்கிறீர்கள். இதன் மூலம் இறந்துபோனவரின் உடலை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.