நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன.
இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சுவீடன் இணைவதற்கு ஆதரவாக 188 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 6 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், ஆதரவு பெருகி வருவதால், நேட்டோ அமைப்பில் 32-வது நாடாக சுவீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.