10-வது புரோ கபடி லீக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிசுற்றை எட்டியது.
3 முதல் 6-வது இடத்தை பெற்ற அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதலாவது அரையிறுதியில் புனேரி பால்டன் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்சுடன் மோத உள்ளது. இதையடுத்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொள்கிறது.