பஞ்சாப்பில் பிரபல பாடகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான சித்து மூஸ்வாலா கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது.
வி.ஐ.பி. கலாசார பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பகவந்த் மான் அரசு 424 பேரின் வி.ஐ.பி. பாதுகாப்பை நீக்கியது. அவர்களில் சித்துவும் ஒருவர் ஆவார். இதனால், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
சித்து மூஸ்வாலா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகனாவார். இந்நிலையில், சித்துவின் தாயார் சரண் கவுர் ஐ.வி.எப். முறையில் கர்ப்பிணியாகி உள்ளார். இதனால், சித்துவின் பெற்றோர் 2-வது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனை கவுரின் உறவினரான சம்கவுர் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதன்படி, மார்ச் மாதத்தில் சரண் கவுருக்கு 2-வது குழந்தை பிறக்கும் என சித்துவின் பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். பஞ்சாப்பில் மன்சா மாவட்டத்தில் உள்ள ஜவகர் கே கிராமத்திற்கு ஜீப்பில் தனது 2 நண்பர்களுடன் சித்து சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை நோக்கி அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, தப்பி விட்டது.
இதில் பலத்த காயமடைந்த சித்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் படுகொல செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வழங்கப்பட்டு வந்த அரசு பாதுகாப்பு நீக்கப்பட்டு இருந்தது. சித்து உயிரிழக்கும்போது அவருக்கு வயது 28. இந்நிலையில், அவருடைய பெற்றோர் 2-வது குழந்தையை எதிர்பார்த்து உள்ளனர்.