Thursday, December 5, 2024
Google search engine
Homeவிளையாட்டுஜாகீர்கானிடம் இருந்து 'ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சை கற்றேன்: ஆண்டர்சன் பேட்டி

ஜாகீர்கானிடம் இருந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சை கற்றேன்: ஆண்டர்சன் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 698 விக்கெட் (186 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். இன்னும் 2 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் 700 விக்கெட் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர், வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற சிறப்பை பெறுவார். அனேகமாக அடுத்த வாரம் தர்மசாலாவில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவர் இச்சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு இணையாக இன்னும் அபாரமாக பந்து வீசி வரும் 41 வயதான ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானின் பந்து வீச்சை பார்த்து அவரிடம் இருந்து சில விஷயங்களை கற்று இருக்கிறேன். குறிப்பாக அவர் இங்கு எப்படி ‘ரிவர்ஸ் ஸ்விங்’கை பயன்படுத்தினார், பந்து வீச ஓடி வரும் போது அவர் எப்படி பந்தை பிடிக்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து நானும் அதை முயற்சித்து பார்த்து இருக்கிறேன்.

உடல் அளவில் நான் இன்னும் நல்ல நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். எனக்கு வயது 41 ஆண்டு 200 நாட்கள். ஆனாலும் இளம் வீரராகவே உணர்கிறேன். தொடர்ந்து இளம் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுகிறேன். விரும்பும் வேகத்தில் இன்னும் என்னால் பந்து வீச முடியும். எனது திறமையால் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். என்னை பொறுத்தவரை அது தான் ரொம்ப முக்கியம். வயது என்பது வெறும் நம்பர் தான். வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை.

நடப்பு தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அறிவேன். அதில் அவர் தனித்திறன் வாய்ந்த வீரராக திகழ்கிறார். சீரான வேகத்துடன் துல்லியமாக பந்து வீசுகிறார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் அவரது ரிவர்ஸ் ஸ்விங் வகை பந்து வீச்சு சிறந்த பந்து வீச்சில் ஒன்றாக இருந்தது. இதில் ஆலி போப் அவரது யார்க்கரில் கிளீன் போல்டு ஆனதை பார்த்தோம். அது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. சரியாக திட்டமிட்டு வீழ்த்தினார். அதனால் தான் அவர் ‘நம்பர் ஒன்’ பவுலராக வலம் வருகிறார். அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு பந்து வீச்சாளர். எனவே இது போன்று பந்து வீசுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பும்ரா மட்டுமின்றி, முகமது ஷமி, முகமது சிராஜூம் தரமான பவுலர்கள். இஷாந்த் ஷர்மாவும் உள்ளார். அதனால் தான் உண்மையிலேயே இந்தியாவின் பந்துவீச்சு வலுவாக காணப்படுகிறது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வது எளிதானது அல்ல. அந்த திறமையை எங்களது பவுலர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது.

நாங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களுக்கு எதிராகவே விளையாட விரும்புகிறோம். அந்த வகையில் முன்னணி வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏமாற்றமே. முந்தைய சில தொடர்களில் எங்களுக்கு இடையே ‘நீயா-நானா’ போட்டி இருந்துள்ளது.

இவ்வாறு ஆண்டர்சன் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments