இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். குறிப்பாக ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம்.
அதேபோல 3-வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜூரெல் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
அதை விட அப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டினார். மேலும் ரிசப் பண்ட் வந்தாலும் தோனி தன்னுடைய கெரியரில் எட்டிய அதே உயரத்தை துருவ் ஜூரெலும் எட்டுவார் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் அனைவராலும் எம்.எஸ். தோனியாக முடியாது என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அதே சமயம் நல்ல திறமையுள்ள துருவ் ஜூரெலை இப்படி ஒப்பிடாமல் முழுமையாக விளையாட விடுமாறு கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாக பாராட்டும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
“எம்.எஸ். தோனி முற்றிலும் வித்தியாசமானவர். துருவ் ஜூரெல் நல்ல திறமையை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தோனி தோனியாக உருவெடுப்பதற்கு 20 வருடங்கள் தேவைப்பட்டன. எனவே துருவ் ஜூரெலை விளையாட விடுங்கள். சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. குறிப்பாக அழுத்தத்தின் கீழ் அவரைப் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். அவரிடம் நல்ல பொறுமை இருக்கிறது.
அதேபோல ஸ்பெஷல் திறமையை கொண்ட ஜெய்ஸ்வால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடியவர். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சமமாக விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் மகத்தான கெரியரை பெற நான் விரும்புகிறேன்” என்று கூறுகிறார்.