ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் இலக்குடன் காசா முனையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா முனையின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தெற்கு பகுதியில் எஞ்சியுள்ள ரபா நகரையும் தாக்க திட்டமிட்டுள்ளது. பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால், ரமலான் மாதம் தொடங்குவதற்குள் ரபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில், காசா நகரின் அருகே உதவிப் பொருட்களை பெறுவதற்காக ஏராளமான பாலஸ்தீனர்கள் இன்று காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்தன. இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 280 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த தகவல் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.