கனரக வாகனப் போக்குவரத்துச் சேவை மேம்படுத்தப்படும் என ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் உறுதியளித்துள்ளார்.
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்’ வருடாந்த மாநாடு நேற்றைய தினம் மிசிசாகா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
மேற்படி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின் நீண்ட கால உறுப்பினரும், ‘Jays Professional Truck Training Centre நிறுவனத்தின் தலைவருமாகிய ஜேய் ஜெயானந்தன் இந்த நிகழ்வு பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
தற்போது ஒன்றாரியோ மாகாணத்தில் கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவைகளுக்கான சாரதிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளதாக விஜேய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
அதற்கான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்தி தங்கள் கனரக வாகன பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஏராளமான சாரதிகளை உருவாக்கும் அதன் நிர்வாகிகளையும் பயிற்றுவிக்கும் போதானாசிரியர்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெருந்தெருக்களின் இளைப்பாறும் நிலையங்களில் மேலதிக கனரக வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்தும் வகையில் தமது அமைச்சினால் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இணை அமைச்சர் விஜய் தணிகாசலத்தின் உரையை பல்வேறு மொழிகளைப் பேசும் பயிற்சி நிறுவனங்களின் அதிபர்கள் பாராட்டிச் சென்றார்கள் என்றும் ஜெயானந்தன் குறிப்பிட்டுள்ளார்.