வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடக்கிறது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவும் என்பதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டுவார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரை பகிரங்கமாக விமர்சித்த இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை சாரித் அசலங்கா வழிநடத்துகிறார். உள்நாட்டில் வங்காளதேசம் எப்போதும் வலுவானது என்பதால் இலங்கைக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
வங்காளதேச அணியில் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.