இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 34 வயதான இடக்கைசுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து ஜார்கண்டை சேர்ந்த நதீம் கூறுகையில், ‘இனி இந்திய அணியில் இடம் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துள்ளேன். தேர்வாளர்களின் அணிக்கான திட்டத்தில் நான் இல்லை. திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். உலகம் முழுவதும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளேன்.’ என்றார்.
ஷபாஸ் நதீம் இந்திய அணிக்காக 2 டெஸ்டில் ஆடி 8 விக்கெட் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 140 ஆட்டங்களில் 542 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ஐதராபாத் அணிக்காக விளையாடி 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் (உள்ளூர் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியை சேர்த்து) ஒரு இன்னிங்சில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளிய உலகச் சாதனை அவரது வசம் உள்ளது. 2018-ம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்காக களம் இறங்கி இந்த சாதனையை படைத்திருந்தார்.