நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.
அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 2004, 2009, 2014 ஆகிய ஆண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு தேர்தலில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
அந்த தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அங்கு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்நிலையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரதீப் சிங்கால் தெரிவித்தார். டெல்லியில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய பிறகு இத்தகவலை அவர் தெரிவித்தார்.
அமேதி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.