மாஸ்டர் கார்டு, விசா, ருபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப், டைனர்ஸ் கிளப் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகளாக உள்ளன. கிரெடிட் கார்டுகளில் இந்த நெட்வொர்க்குகளில் ஏதேனும் ஒன்றின் பெயர் இருக்கும்.
ஆனால், இந்த நெட்வொர்க்குகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்ய முடியாதவகையில், நெட்வொர்க்குடன் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளும், நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொள்வதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்தன.
இவற்றை கருத்தில்கொண்டு, கிரெடிட் கார்டு வழங்குவதற்கான தனது வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.
இதுதொடர்பாக கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இதர கார்டு நெட்வொர்க்குகளின் சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளர்களை தடுக்கும் வகையில், எந்த கார்டு நெட்வொர்க்குடனும் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது.
இனிமேல், புதிதாக கிரெடிட் கார்டு வழங்கும்போது, கார்டு நெட்வொர்க்கை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளராக இருந்தால், அவர்கள் கிரெடிட் கார்டை புதுப்பிக்கும்போது கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். சுற்றறிக்கை வெளியானதில் இருந்து 6 மாதங்களில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றுவதை கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களும், கார்டு நெட்வொர்க்குகளும் உறுதி செய்ய வேண்டும்.
இருப்பினும், 10 லட்சம் அல்லது அதற்கு குறைவான கிரெடிட் கார்டுகளை மட்டுமே வழங்கி உள்ள நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. தங்களது சொந்த கார்டு நெட்வொர்க் மூலம் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.