படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி வேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று (02) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள், இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வரும் வரையில் அதிகாரத் தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதிமறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடுகின்றோம்.
அத்துடன், வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். எனவே ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத் தரப்பிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம் என்றனர்.