Friday, October 4, 2024
Google search engine
Homeவிளையாட்டுஇந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்: இன்று தொடக்கம்

இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட்: இன்று தொடக்கம்

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இவ்விரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உள்நாட்டில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்தியா இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க டெஸ்டில் ரிஷப் பண்ட், சுப்மன் கில், அஸ்வின் சதமும், ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா அரைசதமும் அடித்தனர். பந்து வீச்சில் அஸ்வினுடன், ஜடேஜா, பும்ரா இணைந்து மிரட்டினர்.

கான்பூர் ஆடுகளம்

பொதுவாக கான்பூர் கிரீன் பார்க் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், அதன் பிறகு பேட்டிங்குக்கும் சாதகமாக இருக்கும். கடைசி 3 நாட்களில் ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க பரிசீலிக்கிறது. அந்த வகையில் உள்ளூர் நாயகன் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.

சாதனையின் விளிம்பில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 300 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். 74-வது டெஸ்டில் களம் இறங்கும் அவர் டெஸ்டில் 300 விக்கெட் மற்றும் 3 ஆயிரத்துக்கு மேல் ரன் இவற்றை அதிவேகமாக எட்டும் 2-வது வீரர் என்ற பெருமையை பெற காத்திருக்கிறார்.

வங்காளதேசம் எப்படி?

சென்னை டெஸ்டில் படுதோல்வி அடைந்த வங்காளதேச அணி இந்த டெஸ்டில் முடிந்த வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுக்க முயற்சிக்கும். ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் டெஸ்டில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் உள்நாட்டில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், இதுவே அவரது பிரிவுபசார டெஸ்ட் போட்டியாக இருக்கும். பாகிஸ்தான் தொடரில் இருந்து தகிடுதத்தம் போடும் ஷகிப் அல்-ஹசன் சென்னை டெஸ்டில் 32 மற்றும் 25 ரன் வீதம் எடுத்தார். ஆனால் விக்கெட் வீழ்த்தவில்லை.

அவர் பார்முக்கு திரும்பினால் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுப்பெறும். அதே போல் லிட்டான் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரும் ரன் திரட்ட ஆர்வமாக உள்ளனர். ஆடுகளம் சுழலுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் அந்த அணி தைஜூல் இஸ்லாமை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆட்டத்தை கடைசி நாள் வரை இழுத்து செல்வதே அந்த அணியின் நோக்கமாகும். என்றாலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் இதுவரை வெற்றி பெறாத வங்காளதேசம் அந்த மோசமான வரலாற்றை மாற்றுவது கடினம் தான்.

கான்பூர் மைதானத்தில் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் இந்தியா 7-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. 13 டெஸ்ட் டிரா ஆனது. இங்கு இந்தியா 3 முறை 600-க்கு மேல் ரன் குவித்து மலைக்க வைத்துள்ளது. 1986-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 676 ரன்கள் சேர்த்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1959-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 105 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும். 1983-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இந்த மைதானத்தில் தோற்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

மழையால் பாதிப்பா..?

இந்தியா-வங்காளதேசம் இடையிலான போட்டி மழையால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் கான்பூரில் முதல் 3 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டியின் முதல் நாளான 27-ம் தேதி சராசரியாக கான்பூரில் 50 – 70 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதனால் முதல் நாள் போட்டி டாஸ் கூட வீசப்படாமல் பெருமளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல 2வது நாளும் சராசரியாக 50 – 60 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் 3வது நாளும் 40 – 50 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. ஆனால் கடைசி 2 நாட்களில் முழுமையாக மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் இரு நாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் பட்டேல்.

வங்காளதேசம்: ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மக்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா அல்லது தைஜூல் இஸ்லாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments