ஈரானை சேர்ந்தவர் ஷம்ஜித் ஷர்மெத் (வயது 69). இவர் ஜெர்மனி குடியுரிமை பெற்றவர் ஆவார். அமெரிக்காவில் வசித்து வந்த ஷம்ஜித் ஷர்மெத் மீது ஈரான் அரசு பயங்கரவாத குற்றஞ்சாட்டியது. 2008ம் ஆண்டு மத வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஷம்ஜித் ஷர்மெத்திற்கு தொடர்பு இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. மேலும், 2017ம் ஆண்டு டிவி விவாத நிகழ்ச்சியின்போது ஈரானின் ஏவுகணை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் குறித்த விவரத்தை கூறியதாக ஷம்ஜித் மீது ஈரான் குற்றஞ்சாட்டியது.
இதனிடையே, அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்த ஷம்ஜித் ஷர்மெத் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வர்த்தக நிமித்தமாக இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்தார். துபாயில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் இணைப்பு விமானத்திற்கு காத்திருந்த ஷம்ஜித்தை ஈரான் உளவுத்துறையினர் கடத்தி சென்றனர்.
துபாயில் இருந்து ஓமன் வழியாக ஷம்ஜித் ஈரான் கொண்டு செல்லப்பட்டார். கடத்தல் சம்பவம் அரங்கேறிய 2 நாட்களுக்கு பின் ஷம்ஜித்தை கைது செய்துவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்தது.
இதையடுத்து, ஷம்ஜித் மீது பயங்கரவாத வழக்கு நடைபெற்ற நிலையில் அந்த வழக்கில் கடந்த ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு ஜெர்மனி, அமெரிக்கா, உள்பட பல்வேறு நாடுகளும் ஐ.நா. அமைப்பும் கண்டனம் தெரிவித்தன. ஷம்ஜித்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட உடன் ஈரான் தூதரக அதிகாரிகள் 2 பேரை ஜெர்மனி நாட்டில் இருந்து வெளியேற்றியது.
இந்நிலையில், ஷம்ஜித் ஷர்மெத்திற்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஷம்ஜித்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஈரான் அரசு நேற்று தெரிவித்தது. இதற்கு ஜெர்மனி, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேவேளை, ஷம்ஜித்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஈரானிக்கான தூதரை ஜெர்மனி திரும்பப்பெற்றுள்ளது.