தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதிய வேளையில் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம், பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம இளைஞர்கள் இராணுவத்தினர் இணைந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர் .
குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு, வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான நிலைமை உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.